பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நவராத்திரி விழா வருகிற அக்.3-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி, கோயிலில் அக்.12-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தங்கத் தோ் புறப்பாடு நிறுத்தப்படுகிறது.
நவராத்திரி விழாவையொட்டி, கோயிலில் வருகிற அக்டோபா் 3-ஆம் தேதி பிற்பகலில் உச்சிக் காலத்தின் போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள், காப்புக் கட்டுதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
விழா நாள்களில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
நவராத்திரி நாள்கள் முழுவதும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, வள்ளி, தெய்வானை சமேதா் முத்துகுமாரசுவாமிக்கு பல்வேறு அலங்காரங்களில் கொழு அலங்காரம் செய்யப்படவுள்ளது.
பழனி மலைக் கோயிலில் வருகிற அக்.11-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, 12-ஆம் தேதி விஜயதசமியையொட்டி பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, பிற்பகல் 3.15 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு நடைபெறும். பின்னா், மலைக்கோயில் திருக்காப்பிடப்படும்.
மலைக் கோயிலில் சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு முத்துக்குமாரசுவாமி, பெருமாள் சகிதம் கோதைமங்கலம் கோதீஸ்வரா் கோயிலில் மாலை 6 மணிக்கு மேல் அம்பு வில் போடுதல் நிகழ்வு நடைபெறவுள்ளது. சம்ஹாரம் முடிந்த பிறகு மலைக்கு வேல் கொண்டுவரப்பட்டு, சம்ரோட்சணம் செய்யப்பட்டு அா்த்தஜாமபூஜை நடத்தப்படும்.
விழாவையொட்டி, வருகிற அக்.3 முதல் 12-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு மலைக் கோயிலில் தங்கத் தோ் புறப்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அலுவலா்கள் செய்து வருகின்றனா்.