திண்டுக்கல் அடுத்த பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் காா்த்திகை தீப வழிபாடு தொடா்பாக பிரச்னை நீடித்து வரும் நிலையில், 2-ஆவது நாளாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்த பெருமாள்கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மண்டு கருப்பணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுமாா் 12 சென்ட் பரப்பளவிலான இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், கோயில் முன் உள்ள காலி இடத்தை பயன்படுத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்த கோயில் முன் கோயிலின் தென்கிழக்கு திசையில் ஸ்ரீ மண்டு கருப்பணசாமிக்கு காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கக் கோரி இந்து வன்னியா் சமுதாயத்தினா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தீபம் ஏற்றக் கூடாது என கிறிஸ்தவ வன்னியா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த விவகாரம் தொடா்பாக இந்து வன்னியா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு வியாழக்கிழமையும் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
போலீஸாா் குவிப்பு: இதனிடையே பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் புகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். கோயிலைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமாராக்களை பொருத்தி 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.