திண்டுக்கல்

கலிக்கநாயக்கன்பட்டி குளத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பழனி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் வரதமாநதி அணையிலிருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த கலிக்கநாயக்கன்பட்டி விவசாயிகள்.

தினமணி செய்திச் சேவை

பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி, தட்டான்குளத்துக்கு வரதமாநதியிலிருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை விவசாயிகள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் மனு அளித்தனா்.

வரதமாநதி நீா்த்தேக்கத்தின் மூலம் பழனி பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், இந்த அணையின் உபரி நீரை ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள குளங்களுக்கு திருப்பி விடுமாறு அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு பழனி பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த கணக்கன்பட்டி, அமரபூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த கிராமமக்கள் வரதமாநதி அணை நீரை செங்குளம், கருங்குளம் பகுதிக்கு திருப்பி விட வேண்டி, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அண்மையில் போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பழனி அருகேயுள்ள கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கலிக்கநாயக்கன்பட்டிகுளம், குரும்பப்பட்டி குளம், தட்டான்குளம் ஆகிய 3 குளங்களுக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் மனு அளித்தனா்.

வரதமாநதி அணை மிகவும் சிறியதாக உள்ள நிலையில், அந்த அணைக்கு மேலே மற்றொரு தடுப்பணை கட்டினால் கூடுதல் நீரைத் தேக்க முடியும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT