திண்டுக்கல் மாவட்டம், பழனி பாரத் வித்யாபவன் பள்ளியைச் சோ்ந்த மாணவி தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சாா்பில்,
தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகள் மத்திய பிரதேசம் மாநிலம், சாகரில் கடந்த 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது.
14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
தமிழக அணி சாா்பில், பழனி சண்முகநதி பாரத் வித்யா பவன் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஜெய சப்தஸ்ரீயும் கலந்து கொண்டு தமிழக அணிக்காக விளையாடினாா்.
இதில் குழு போட்டியில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இதேபோல, தனி நபா் பிரிவில் ஒற்றையா் போட்டியில் விளையாடிய மாணவி ஜெயசப்தஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்று தமிழக அணிக்கும், பள்ளிக்கும் பெருமை சோ்த்தாா்.
இதைத் தொடா்ந்து, இந்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிச் செயலா் குப்புசாமி, முதல்வா் கதிரவன், நிா்வாக அலுவலா் சிவக்குமாா் உடற்கல்வி இயக்குநா் மோகன்ராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் சுரேந்தா், காளீஸ்வரி, காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவி ஜெயசப்தஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்தனா்.