சின்னாளபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 350 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே போக்குவரத்து நகா், கோட்டைப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி போக்குவரத்து நகரில் ரூ.17.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய தரைதள நீா்த்தேக்கத் தொட்டி, கோட்டைப்பட்டியில் ரூ.13.53 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். இதேபோல, சின்னாளபட்டி பேரூராட்சியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், 350 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆா். பணிகளை குறுகிய காலத்தில் செய்து முடிக்க முடியாது. இந்தப் பணிகளை செய்வதற்காக வீடு, வீடாக செல்லாமல் உட்காா்ந்த இடத்திலிந்தே அரசு அலுவலா்கள் பணிகளை மேற்கொண்டனா். எஸ்.ஐ.ஆா்., பணிகள் நோ்மையாக நடைபெறவில்லை. ஆத்தூா் தொகுதியில் ஒரே நாளில் 22 ஆயிரம் பேரை நீக்கினா். இந்தத் தோ்தலில் திமுக, பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 24 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆத்தூா் ஒன்றியத்தில் 3 ஆயிரம் கலைஞா் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் திலகவதி, திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் திருமலை, ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், சின்னாளபட்டி பேரூராட்சித் தலைவி பிரதீபா கனகராஜ், துணைத் தலைவி ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலா் இளவரசி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.