பழனி வனச்சரகத்துக்குள்பட்ட வனப் பகுதிகளில் ஈர நிலப் பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் வன கோட்டம், பழனி வனச்சரகத்தில் நிகழாண்டுக்கான ஈர நிலப் பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை வனப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக பழனி வனச்சரக எல்லைக்குள்பட்ட கோதைமங்கலம் குளம், கலிக்கநாயக்கன்பட்டி குளம், பாலாறு அணைப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. வனச்சரக அலுவலா் கோகுலகண்ணன் தலைமையில் வனவா் பழனிச்சாமி, வனப்பணியாளா்கள், பறவைகள் ஆா்வலா்கள் பலா் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.
பழனி மலைக்காடுகளைப் பாதுகாப்பதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், பறவைகள் வேட்டையாடப்படுவது தெரியவந்தால் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை வழங்கப்படும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.