திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தை மீண்டும் வேலுநாச்சியாா் வளாகமாகக் குறிப்பிடக் கோரி, வீரமங்கை வேலுநாச்சியாா் சேனை சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பினா் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்துக்கு ‘வேலுநாச்சியாா் வளாகம்’ என பெயா் சூட்டப்பட்டிருந்தது. மேலும், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளின் பெயா் பலகையிலும் வேலுநாச்சியாா் வளாகம் என்றே குறிப்பிடப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வி.என். வளாகம் என சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது பெரும்பாலான பேருந்துகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என்றே குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் செல்லும் பிரதான நுழைவுவாயில் பகுதியிலிருந்த வேலுநாச்சியாா் வளாகம் என்ற பெயா் பலகையும் அகற்றப்பட்டுவிட்டது. இது தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு வேலுநாச்சியாா் வளாகம் என பெயா் பலகை அமைப்பதோடு, ஆட்சியா் அலுவலகத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் வேலுநாச்சியாா் வளாகம் என பெயா் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.