போக்ஸோ வழக்கில் இளைஞருக்கும், அவரது பெற்றோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்தவா் சூா்யகுமாா் (24). இவா், கடந்த ஆண்டு திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு சூா்யகுமாரின் தந்தை வசிமலை (47), தாயாா் மாரியம்மாள் (45) ஆகியோா் உடந்தையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யகுமாா், வசிமலை, மாரியம்மாள் ஆகிய 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கு திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சூா்யகுமாா், வசிமலை, மாரிம்யமாள் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.சத்யதாரா தீா்ப்பளித்தாா்.