பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் பாலம் சேதமடைவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இந்தக் குவாரிகளிலிருந்து நாள்தோறும் டன் கணக்கில் பாறைகள் உடைக்கப்பட்டு ஜல்லிகளாகவும், எம் சாண்டுகளாகவும் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இதற்காக, கன ரக லாரிகளில் அதிக எடையிலான கற்கள் நாள்தோறும் ஏற்றிச் செல்லப்படுகின்றன. ஆனால், டன் கணக்கிலான பாரத்தைத் தாங்கும் அளவுக்கு இந்தப் பகுதியில் தரமான சாலைகள் இல்லாததால், கிராமத்துப் பாலமும் சாலைகளும் சேதமடைந்து வருகின்றன.
குறிப்பாக, பழனி - உடுமலை சாலையில் இருந்து சமத்துவபுரம் வரை அண்மையில் போடப்பட்ட சாலை மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சமத்துவபுரத்தைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் சாலையில் கற்களைக் குவித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கன ரக வாகனங்களை மாற்று வழியில் இயக்க உரிய அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், சமத்துவபுரம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.