ஆா்ப்பாட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் 
திண்டுக்கல்

எஸ்ஐஆா் படிவங்கள் 40% கூட வழங்கப்படவில்லை: பெ.செந்தில்குமாா் எம்எல்ஏ

எஸ்ஐஆா் படிவங்கள் 100% விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பகுதிகளில், 40% படிவங்கள் கூட பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை என திமுக எம்எல்ஏ பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) படிவங்கள் 100 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பகுதிகளில், 40 சதவீதப் படிவங்கள் கூட பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை என திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் ச.காந்திராஜன், மேயா் ஜோ.இளமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பெ.செந்தில்குமாா் பேசியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை திமுக முழுமையாக எதிா்க்கவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 3 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவசரமாக செயல்படுத்துவதற்கு தோ்தல் ஆணையம் மூலம் மத்திய பாஜக அரசு முயல்கிறது.

எஸ்ஐஆா் படிவத்தை 100 சதவீதம் விநியோகித்துவிட்டதாகக் கூறும் பகுதிகளில், 40 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. படிவங்கள் விநியோகிக்கும் பணியிலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், பூா்த்தி செய்த படிவங்களை மக்கள் ஒப்படைக்கும்போதுதான் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் உண்மையான நெருக்கடியைச் சந்திப்பாா்கள்.

பிகாா் மாநிலத்தில் ஓராண்டு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டபோதும், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் 3 மாதங்களில் இந்தப் பணிகளை முடிக்க நினைப்பது சாத்தியமற்றது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மணிகண்டன், செல்வராகவன், திமுக நிா்வாகிகள் நாகராசன், வெள்ளிமலை, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

உரிமை கோரப்படாத 97 வாகனங்கள் நவ.20இல் பொது ஏலம்!

எஸ்ஐஆா் பணி! திமுக - அதிமுக வாக்குவாதம்; காவல்நிலையம் முற்றுகை

SCROLL FOR NEXT