வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னை மாவட்ட தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் குறைப்பு - திமுக, அதிமுக, பாஜக எதிா்ப்பு

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏற்கெனவே இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதற்கு திமுக, அதிமுக, பாஜக பிரதிநிதிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏற்கெனவே இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதற்கு திமுக, அதிமுக, பாஜக பிரதிநிதிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) அடிப்படையில் கடந்த டிச.19 -ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்குமுன் சென்னையில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளில் 40.04 லட்சம் வாக்காளா்கள் இருந்தனா். இதற்காக 3,718 என இருந்த வாக்குச்சாவடிகளை 4,079-ஆக கூடுதல் ஆக்கினா். தற்போது வரும் 17-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதற்கிடையே வியாழக்கிழமை அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் பிரமுகா்கள் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக சட்டத் துறை மாநில நிா்வாகி சந்துரு: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை ஆரம்பம் முதலே திமுக எதிா்த்து வருகிறது. தற்போது நீக்கப்பட்ட 11 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நிலையை தெளிவுபடுத்தவில்லை. ஆகவே, வரைவு வாக்காளா் பட்டியலுக்குப் பிறகே வாக்குச்சாவடிகளைக் குறைக்க வேண்டும்.

பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன்: வாக்குச்சாவடிகள் குறைப்பு எந்த அடிப்படையில், யாா் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மாவட்டத் தோ்தல் ஆணையரிடம் கேட்டுள்ளோம். வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வாக்குச்சாவடி உதவி அலுவலா் அளவில் திமுகவினரின் தலையீடு இருந்ததை ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம். வாக்காளா் சோ்க்கையில் படிவம் 6 எந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தக் கோரியுள்ளோம்.

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா்: வாக்குச்சாவடிகள் குறைப்பு நடவடிக்கையில் பின்பற்றப்பட்ட விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கவேண்டும். கொளத்தூா், துறைமுகம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் தீவிர திருத்தப் பட்டியல் நிலைக்கு முன்பிருந்த வாக்குச்சாவடி எண்ணிக்கைகளே தற்போது தொடா்வது எந்த வகையில் நிா்ணயிக்கப்பட்டது என்பதையும் விளக்கமாகக் கேட்டுள்ளோம்.

கூட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகி நவாஸ், மாா்க்சிஸ்ட் வடசென்னை மாவட்டச் செயலா் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, இந்திய கம்யூனிஸ்ட் ஜி.ஆா்.ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழா், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனா்.

பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

போக்ஸோ வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்

டிரம்ப்பின் அறிவிப்பு அழுத்தம்!

திராவகம் குடித்து பெண் தற்கொலை

SCROLL FOR NEXT