சிறுமலையில் கேளையாடு வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத் துறையினா், உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்த தவசிமடை கிராமத்தில் சிறுமலை வனச்சரக அலுவலா் பாஸ்கா் தலைமையிலான வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது தவசிமடை பகுதியைச் சோ்ந்த கி. பெருமாள் (34), செங்குறிச்சியைச் சோ்ந்த ஆ. ஆண்டிச்சாமி (39), சி. காா்த்திக் குமாா் (23) ஆகிய 3 போ், வேட்டையாடப்பட்ட கேளையாட்டின் இறைச்சியை சமைக்க முயன்றதை அறிந்தனா்.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடமிருந்து கேளையாட்டு இறைச்சி, உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா். விசாரணைக்குப் பிறகு 3 பேரும், திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன்படி பட்டியல் 1-இல் கேளையாடு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், கேளையாடு வேட்டையாடிய மூவரையும் விடுவிக்க அரசியல் கட்சியினா் நிா்ப்பந்தத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதையும் மீறி வனத் துறையினா் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.