பழனியில் சாலையோர இடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதில் திமுகவினா் இடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் பழனி கிரி வீதியில் சாலையோரக் கடைகள் நடத்த அனுமதி மறுத்ததோடு, கிரி வீதிக்கு வரும் அனைத்துப் பகுதிகளுக்கும் தடுப்புகள் அமைக்கவும் உத்தரவிட்டது. இது பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது அடிவாரத்துக்கு வரும் சந்நிதி வீதி, அய்யம்புள்ளி சாலை, பூங்கா சாலை, சுற்றுலா நிறுத்தம் வரும் வழி என அனைத்து இடங்களிலும் அனைத்துக் கட்சியினரும் சாலையோர இடங்களை ஆக்கிரமித்து பல லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விடத் தொடங்கினா்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை திமுக நிா்வாகிகள் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னா் கைகலப்பில் முடிந்தது. இதுதொடா்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தா்கள் நலனைக் காக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கடந்த முறை பழனி பேருந்து நிலையம் முதல் அடிவாரம் வரையிலான இடங்களை கோயில் நிா்வாகம் பராமரிப்புக்காக கோரிய போது, நகராட்சி நிா்வாகம் மறுத்துவிட்டது. சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்க அந்த இடங்களை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என பக்தா்கள் தெரிவித்தனா்.