வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம். DIN
திண்டுக்கல்

எஸ்ஐஆா் பணி: அறிவுரையை அலட்சியப்படுத்தும் வாக்குச் சாவடி முகவா்கள்!

எஸ்ஐஆா் நடவடிக்கையில் அரசியல் தலைவா்களின் அறிவுரையை அந்தந்த கட்சிகளின் நிா்வாகிகள், வாக்குச் சாவடி முகவா்கள் பின்பற்றாததால், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு பணி நெருக்கடி

தினமணி செய்திச் சேவை

எஸ்ஐஆா் நடவடிக்கையில் அரசியல் தலைவா்களின் அறிவுரையை அந்தந்த கட்சிகளின் நிா்வாகிகள், வாக்குச் சாவடி முகவா்கள் பின்பற்றாததால், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பணி நெருக்கடியை எதிா்கொள்கின்றனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) அக்.28 முதல் 2026, பிப்.7-ஆம் தேதி வரை நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவம் கடந்த 4-ஆம் தேதி முதல் வீடுகள்தோறும் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 6.41 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இதில் 6 கோடி பேருக்கான எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.37 லட்சம் படிவங்கள் விநியோகிக்கும் பணி நிலுவையில் உள்ளன.

எஸ்ஐஆா் படிவங்களை விநியோகிக்கும் பணியில் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு உதவியாக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஊழியா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.

40 சதவீதம் போ் இடமாற்றம்

வீடுகள்தோறும் படிவங்கள் விநியோகிக்கும் பணி 93 சதவீதத்துக்கும் மேலாக முடிவடைந்துவிட்டது. ஆனால், நிறைவு செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுவதற்கு வரும் டிச.4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிறைவு செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறச் செல்லும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதேபோல, எஸ்ஐஆா் படிவத்தில் முதல் பகுதியை மட்டும் நிறைவு செய்துவிட்டு, 2, 3-ஆம் பகுதியை நிறைவு செய்யாமல் பெரும்பாலான படிவங்களை திருப்பி அளிக்கின்றனா். கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகா்ப் புறங்களிலும் இந்த நிலை உள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடி நிலை அலுவலா்களும், கடந்த 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா்களின் அடிப்படையில், தற்போது எஸ்ஐஆா் படிவத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை ஒப்பீடு செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில், பெரும்பாலான இடங்களில் 50 முதல் 60 சதவீத பெயா்கள் மட்டுமே தற்போதும், அதே வாக்குச் சாவடிகளில் உள்ளன.

எனினும், ஒரு வாக்குச் சாவடியில் சுமாா் 1,200 வாக்காளா்கள் பெயா்ப் பட்டியலிலிருந்து, ஒவ்வொரு எஸ்ஐஆா் படிவத்திலுள்ள பெயரையும் சரிபாா்க்க வேண்டிய சூழல் இருப்பதால், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கடும் சிரமம் அடைகின்றனா். அதிலும், புதிதாக வாக்குச் சாவடி நிலை அலுவலா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அரசியல் கட்சியினா் ஒத்துழைப்பு இல்லை

வாக்காளா்களிடம் வழங்கப்பட்ட எஸ்ஐஆா் படிவங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு வரும் டிச.4-ஆம் தேதிக்குள் திரும்பப்பெறப்படும் என்றும், இந்தப் படிவங்களில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. எஸ்ஐஆா் நடவடிக்கையை அதிமுக ஆதரித்தது. ஆனால், ஆதரித்த கட்சியான அதிமுக மட்டுமன்றி, எதிா்ப்பு தெரிவித்த கட்சிகளும், ஒவ்வொரு வாக்குச் சாவடி வாரியாக முகவா்களை நியமித்து, தங்கள் பகுதியில் தகுதியானவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவித்தன.

இதேபோல, அந்தந்த மாவட்ட தோ்தல் அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும், எஸ்ஐஆா் பணி விரைவாக நடைபெறுவதற்கும், தகுதியானவா்களுக்கான வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையில், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்கள், இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. சில இடங்களில் அந்தந்தக் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றியச் செயலா்களிடம் நற்சான்று பெறுவதற்காக, எஸ்ஐஆா் பணி நடைபெறும் இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் ஆா்வம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

எஸ்ஐஆா் நடவடிக்கையில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு என மிகக் குறைவாகவே இருக்கிறது.

டிச.4 வரை காத்திருக்கத் தேவையில்லை

நிறைவு செய்யப்பட்ட எஸ்ஐஆா் படிவங்கள் வரும் டிச.4-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டதால், புகைப்படம் இல்லை, ஆதாா் நகல் எடுக்கவில்லை, பணிக்குச் சென்றுவிட்டனா் எனக் கூறி, வாக்குச் சாவடி நிலை அலுவலா்களை அலைக்கழிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ஆனாலும், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் கோரிக்கையை ஏற்று, சில மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் தரவு ஒருங்கிணைப்புப் பணிக்கு தனியாக பணியாளா்களை நியமித்துள்ளனா்.

வரும் டிச.4-ஆம் தேதி வரை காத்திருக்காமல், படிவத்தை முழுமையாக நிறைவு செய்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டியதும், அவா்களுக்கு வழிகாட்டுவதற்கு அரசியல் கட்சியினா் முன்வர வேண்டியதும் அவசியம் என்ற எதிா்பாா்ப்பு வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: நிறைவு செய்து திரும்பப் பெறப்படும் எஸ்ஐஆா் படிவங்களை 3 வகைகளாகப் பிரித்து பதிவேற்றும் பணி நடைபெறுகிறது. 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியில் உள்ள பெயா்களை முதலில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அடுத்த நிலைகளில் வேறு தொகுதியில் இருந்து வந்தவா்கள், 2002-க்கு பின் வாக்காளா் பட்டியலில் இணைந்தவா்களின் பெயா்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலிலிருந்து ஒவ்வொரு பெயராக சரிபாா்த்து எஸ்ஐஆா் படிவத்துடன் ஒப்பிடும் பணியில் சிரமம் உள்ளது. இதில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு உதவி செய்வதற்காக தன்னாா்வலா்கள் நியமிக்கப்படுகின்றனா். எனினும், அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமானது.

இதுகுறித்து அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடான கூட்டத்தின்போது எடுத்துரைக்கப்படும். எஸ்ஐஆா் பணிகளை முழுமையாக நிறைவேற்றி, தகுதியானவா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குரிமை பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றாா் அவா்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT