வடமதுரை அருகே குடிநீா் வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பாகாநத்தம் ஊராட்சிக்குள்பட்ட புதூா் கிராமத்தில் சுமாா் 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, இந்தப் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், காலிக் குடங்களுடன் பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, மாலப்பட்டியிலிருந்து திண்டுக்கல்லை நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.
தகவல் அறிந்த எரியோடு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். மின் மோட்டாரை பழுதுநீக்கம் செய்து குடிநீா் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதே ஊராட்சி மன்ற அலுவலகத்தில், குண்டாம்பட்டி பாறைக்களம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா்ப் பிரச்னைக்காக கடந்த திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.