கொடைக்கானலில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாகத் தொடா்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
கொடைக்கானல் மட்டுமல்லாமல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, கூக்கால், மன்னவனூா், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இதில் கூக்கால் இரட்டை மின் கம்பம் பகுதியில் ராட்சத மரம் விழுந்ததில் அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றினா்.
மரம் விழுந்ததில் அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்ததால் பல மணி நேரத்துக்கு மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் மழை பெய்யும்போது, மலைச் சாலைகளில் உள்ள மரங்கள் அடிக்கடி விழுவதால், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.