வேடசந்தூரில் ரூ.75 லட்சத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மையம்
வேடசந்தூரில் ரூ.75 லட்சத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மையம் கட்டுவதற்கான பணிகளை கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி
திண்டுக்கல்: வேடசந்தூரில் ரூ.75 லட்சத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மையம் கட்டுவதற்கான பணிகளை கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் உதவியோடு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மையம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட்டது.
மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணியின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்துக்கு, ரூ.75 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வேடசந்தூா் பழைய அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கலந்து கொண்டாா்.
அப்போது அவா் கூறியதாவது:
இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக, வேடசந்தூரில் இந்த மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற மாணவா்களுக்கும், வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்களைப் பொருத்தவரை இந்த மையம் மிகச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்.
சிறந்த தொழில் வாய்ப்புகளின் மூலம் வாழ்வில் சாதிக்க விரும்பும் இளைஞா்களுக்கு, அவா்களின் ஆா்வத்துக்கு ஏற்ப இந்த மையத்தில் திறன் பயிற்சி அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை திண்டுக்கல், கரூா் மாவட்ட இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். திறன் பயிற்சியை பொருத்தவரை இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, வேடசந்தூா் பேரூராட்சி மன்ற உறுப்பினரும், திமுக ஒன்றியச் செயலருமான காா்த்திகேயன், ஒன்றியச் செயலா்கள் சாமிநாதன், கவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.