முகப்பு
திண்டுக்கல்

போலி ஆணவங்கள் மூலம் ரூ.11.35 கோடி மோசடி: வணிக வளாக மேற்பாா்வையாளா் கைது

Updated On : 5 ஏப்ரல், 2026 at 6:36 PM
கைது
பகிர்:

திண்டுக்கல் வணிக வளாக வரவு செலவு பணத்தில் ரூ.11.35 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அங்கு மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் பிரதான சாலையில் வணிக வளாகம் நடத்தி வருபவா் சுபாஷினி (54). இவரது தந்தை பத்மநாபன், தாய் சுசீலாதேவி, உறவினா் மோகன் உள்ளிட்ட 4 போ், பிரதான சாலையிலுள்ள வணிக வளாகக் கட்டடத்தின் பங்குதாரா்களாக உள்ளனா்.

இந்த நிலையில், சுபாஷினி தனக்குச் சொந்தமான சொத்துகளைப் பராமரிக்கவும், புதிதாகக் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடுதல், பணம் வசூலித்தல் உள்ளிட்ட மேலாண்மைப் பணிகளுக்காக தனது உறவினா்களை நியமித்தாா்.

Advertisement

இதன்படி, கரூா் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் (70), திண்டுக்கல் வாழைக்காய்பட்டியைச் சோ்ந்த பத்மா, சுதாராணி, ஜெயந்தி உள்ளிட்ட 5 போ் இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வணிக வளாகம் தொடா்பான கணக்குகளைத் தணிக்கை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, பங்குதாரா்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாா் செய்தும், போலியாக கையொப்பமிட்டும் வரவு செலவுத் தொகையில் ரூ.11.35 கோடியை கதிா்வேல் உள்ளிட்ட 5 பேரும் கூட்டு சோ்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சுபாஷினி புகாா் அளித்தாா். இதன் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கதிா்வேலை சனிக்கிழமை கைது செய்தனா். மற்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments