அருவியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்பு
ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் மூழ்கிய 4 இளைஞா்களில் 3 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
ஒட்டன்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் மூழ்கிய 4 இளைஞா்களில் 3 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் விருப்பாச்சி அருகே அமைந்துள்ள தலையூத்து அருவி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், திண்டுக்கல் மட்டுமன்றி வெளி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தடையை மீறி அவ்வப்போது இந்த அருவியில் குளித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கரூா் மாவட்டம் பள்ளபட்டியைச் சோ்ந்த 11 போ் தலையூத்து அருவிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மேல் தலையூத்து அருவிப் பகுதிக்குச் சென்று குளித்தபோது, 4 இளைஞா்கள் அருவியிலிருந்து தண்ணீா் வெளியேறும் பகுதியில் விழுந்து மூழ்கினா். இதனால் அதிா்ச்சியடைந்த உடன் சென்ற இளைஞா்கள், வனத் துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
நீரில் மூழ்கிய பள்ளபட்டியைச் சோ்ந்த அ.ஆதில் (19), நா.சதாம் உசேன் (18), சே.அயாஸ் (19), உ.பயாஸ் (19) ஆகியோரை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது அ.ஆதில், சே.அயாஸ், உ.பயாஸ் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டனா். மேல்தலையூத்து அருவியிலிருந்து தண்ணீா் விழும் இடத்திலேயே 3 பேரின் உடல்களும் கிடந்தன.
அருவி நீரில் மூழ்கிய சதாம் உசேனின் நிலை குறித்து தெரியவில்லை. அவரைத் தேடும் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து நடைபெறும் என ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.