கொடைக்கானல் அருகேயுள்ள காமனூா் ஊராட்சிப் பகுதியில் பூட்டிக் கிடக்கும் அரசு நறுமண சுற்றுலா விடுதிகளை திறக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான காமனூா் ஊராட்சிக்குள்பட்ட பட்லாங்காடு பகுதியில் அரசு நறுமண சுற்றுலா தங்கும் விடுதிகள் உள்ளனன.
தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கொடைக்கானல் உள்ளிட்டப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்த கட்டணத்தில் இங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்குவா்.
இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த விடுதிகள் செயல்படவில்லை. இதனால், இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் புதா்மண்டிக் கிடக்கின்றன.
எனவே, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வெட்டுகள், இயற்கை எழில்காட்சிகளை பாா்க்க வருவோா்கள் இந்த விடுதிகளில் தங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
எனவே, இந்த விடுதிகளை தமிழக ஊரக வளா்ச்சித் துறை, சுற்றுலாத் துறை அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.