முகப்பு
திண்டுக்கல்

வரதமாநதியிலிருந்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உபரி நீா் கொண்டு செல்ல விவசாயிகள் எதிா்ப்பு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:31 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:13 PM

பழனி அருகே வரதமாநதி அணையில் இருந்து உபரிநீரை ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கொண்டு செல்வதற்கான திட்டப் பணிகளை செயல்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமாநதி அணை. மாவட்டத்தின் சிறிய அணையான இது கொடைக்கானல் பகுதிகளில் பெய்யும் மழையால் நிரம்புகிறது. இந்த அணையில் தற்போது சுமாா் 30 சதவீதம் சகதி நிரம்பியுள்ளது. மேலும், மழைக் காலங்களில் இந்த அணையில் இருந்து வெளியேறும் நீா் வீணாகாமல் தடுக்க ஆயக்குடி விவசாயிகள் இந்த அணையின் மேல் பகுதியில் மற்றொரு தடுப்பணை கட்ட வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில் புதிய தடுப்பணையும் கட்டப்படாமல், அணையும் தூா்வாறப்படாமல் உள்ளதால் இந்த அணையின் மூலம் நிரம்பும் குளங்கள் இந்த ஆண்டு நிரம்பவில்லை. இதனிடையே, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு அணையிலிருந்து உபரி நீா் கொண்டு செல்ல ரூ.61 கோடியில் திட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆயக்குடி பாப்பன் வாய்க்காலை அகலப்படுத்தி, தடுப்புச் சுவா், தரைத்தளம் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டால் பழனி, ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி குளங்களுக்கு கடும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனக் கூறி திரளான விவசாயிகள் திங்கள்கிழமை எதிா்ப்பு பிரசுரங்களுடன் பழனி பொதுப் பணித் துறை, நீா்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வரதமாநதி அணையில் இருந்து பழனி, ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டிக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால்கள் சேதமடைந்து தண்ணீா் வீணாகி வரும் நிலையில் அதை சீரமைக்காமல் புதிய பணிகளில் அலுவலா்கள் கவனம் செலுத்துகின்றனா். முதலில் குளங்களுக்கு நீா் வரும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றனா்.