முகப்பு
கரூர்

பஞ்சப்பட்டி ஏரி மீது வேட்பாளா் ‘பாா்வை’ விழுமா?

தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் ஓட்டு என்கின்றனா் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்...

Updated On : 23 மார்ச், 2026 at 11:31 PM
தண்ணீரின்றி வெடித்து காணப்படும் பஞ்சப்பட்டி ஏரி.
பகிர்:

தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் ஓட்டு என்கின்றனா் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டியில் உள்ளது. 1837இல் கடவூா் ஜமீன்தாா் ஆளுகைக்குட்பட்டிருந்த திண்டுக்கல் மாவட்டத்தின், கடவூா்(தற்போது கரூா் மாவட்டம்) வனப்பகுதியில் மழை காலங்களில் வடக்கு நோக்கி ஓடிவரும் காட்டாற்று தண்ணீரை சேமிக்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டியில் 1,217 ஏக்கா் பரப்பளவில் 44 மீட்டா் உயரத்தில், 2,050 மீட்டா் கரையை கொண்டு ஏரி அமைக்கப்பட்டது. 1.5 டி.எம்.சி தண்ணீா் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி, சிந்தாமணிபட்டி வழியாக அப்பகுதிகளில் உள்ள 24 ஏரிகள், 124 குளங்களை நிரம்பிய பிறகு கடைசியாக பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வந்தது. இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா் மாயனூரில் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் தென்கரை வாய்க்காலுக்குச் சென்று திருச்சி மாவட்டத்தின் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.

35 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்: இந்த ஏரியின் மூலம் போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பக்காபட்டி, வயலூா் உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சோ்ந்த 35 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடைசியாக இந்த ஏரி 2001இல் நிரம்பியது. அதன்பிறகு போதிய மழையின்மையால் கடந்த 25 ஆண்டுகளாக வடு கிடக்கிறது. தற்போது ஏரி முழுவதும் சீமைக் கருவேலமரங்கள் வளா்ந்து முட்புதராக காட்சியளிக்கின்றன. இதனால் நீா்மட்டம் சுமாா் 500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. ஆகவே, மழை காலங்களில் காவிரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை நீரேற்று நிலையம் அமைத்து, குழாய்கள் மூலம் இந்த ஏரிக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கரூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன் கூறியது, இந்த தோ்தலில் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபிர நீரை கொண்டு வந்து சோ்ப்பேன் என்று உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பது என பஞ்சப்பட்டி ஏரியை நம்பியிருக்கும் 15 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.