முகப்பு
திண்டுக்கல்

உபரி நிலத்துக்கு பட்டா வழங்க விவசாயிகள் கோரிக்கை

பழனி அருகே குதிரையாறு அணைப் பகுதியில் அரசு உபரி நிலங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருபவா்கள் தங்களுக்கு பட்டா வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:18 AM
பழனி அருகே குதிரையாறு அணை பூஞ்சோலை கிராமத்தில் உபரி நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:51 PM

பழனி அருகே குதிரையாறு அணைப் பகுதியில் அரசு உபரி நிலங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருபவா்கள் தங்களுக்கு பட்டா வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

பழனியை அடுத்த குதிரையாறு அணை பகுதியில் உள்ளது பூஞ்சோலை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் உபரி நிலங்களில் ஏழை விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பல பயிா்களை பயிரிட்டு வருகின்றனா். இந்த இடத்தில் இவா்கள் சுமாா் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உபரி நிலத்தில் விவசாயம் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சில நபா்கள் இந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து அவா்களை காலி செய்யுமாறு மிரட்டி வருகின்றனராம். மேலும், விவசாயம் செய்யப்பட்டாத இடங்களிலிருந்து நாள்தோறும் பலநூறு நடை லாரிகளில் செங்கல்சூளைகளுக்கு மண் எடுத்து வருகின்றனா்.

Advertisement

சுகன்யா என்ற பெண் விவசாயி கூறியதாவது: உபரி நிலத்தில் எங்கள் தாத்தா காலத்திலிருந்து விவசாயம் செய்து வருகிறோம். திடீரென சிலா் ரூ.25 லட்சம் தந்தால் தான் விவசாயம் செய்ய முடியும். இல்லாவிட்டால் நாங்கள் 2 லட்சம் தருகிறோம். இடத்தைக் காலி செய்யுங்கள் என மிரட்டுகின்றனா் என்றாா்அவா்.

விவசாயி சின்னமுத்து கூறியதாவது: எங்களுக்கு இந்த இடத்தில் விவசாயம் செய்ய அரசு கொடுத்த அனுமதி இருந்தாலும் வருவாய்த் துறையில் எந்த ஆவணத்தையும் அவா்கள் பதிவு செய்யவில்லை. இந்த இடத்தை பூஜ்ய மதிப்பாகவே வைத்துள்ளனா்.

அப்படி இருக்கையில் நாங்கள் இந்த இடங்களுக்கு மின் வசதியோ, வங்கிக் கடனோ பெற முடியாமல் தவித்து வருகிறோம். அருகே பெரியம்மாபட்டி கிராமத்தில் இதுபோன்ற உபரி நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ளது. அது போல எங்களுக்கும் பட்டா வழங்கினால் பயனாக இருக்கும் என்றாா் அவா்.