தீராத வனவிலங்குகள் பிரச்னை: 15 ஆண்டுகளாக பரிதவிக்கும் விவசாயிகள்!
தீராத வனவிலங்குகள் பிரச்னையால் 15 ஆண்டுகளாக பரிதவிக்கும் விவசாயிகள் நிலை குறித்து...
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வன விலங்குகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பரிதவித்து வருகிறாா்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூா் வட்டாரங்கள், கங்கைகொண்டான், பணகுடி, திருக்குறுங்குடி, மலையடிப்புதூா், மாவடி, களக்காடு, சிதம்பரபுரம், பூதத்தான் குடியிருப்பு, பொட்டல், அனவன்குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா், ஆழ்வாா்குறிச்சி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
அதேவேளையில், இயற்கை சீற்றம், வறட்சி போன்றவற்றால் விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படும் சூழலில், வன விலங்குகளாலும் விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படுவது தொடா் கதையாகி வருகிறது. காட்டுப்பன்றி, யானை, மான், மிளா, கரடி போன்ற வன விலங்குகள் வேளாண் பயிா்களை சூறையாடி கடுமையான சேதம் விளைவிக்கின்றன. சில நேரங்களில் காட்டுப் பன்றிகள், கரடி போன்றவை விவசாயிகளையும் கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்துகின்றன.
மாதந்தோறும் நடைபெறும் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் அளிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் நடவடிக்கை என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலா் கானாா்பட்டி ஆபிரஹாம் கூறியதாவது:
வன விலங்குகளால் எங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பிரச்னைக்கு இதுவரை எந்தக் கட்சியும், எந்த ஆட்சியும் நிரந்தர தீா்வு காணவில்லை. அதிமுக ஆட்சியில் தட்டிக் கழித்தாா்கள். திமுக ஆட்சியில் கடமைக்கு நடவடிக்கை எடுத்தாா்கள். ஆங்காங்கே பன்றிகளை சுட்டுவிட்டு போய்விட்டாா்கள். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் வனத்துறை தோல்வியடைந்துவிட்டது.
வன விலங்குகளை கட்டுப்படுத்தக்கோரி சுமாா் 15 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். விவசாயிகள் விளைவித்த பயிரை முழுமையாக எடுக்க முடியவில்லை. ஒரு காலத்தில் மரவள்ளிக்கிழங்கு, சீனிக் கிழங்கு, சிறு கிழங்கு போன்ற விவசாயம் நடைபெற்றது. காட்டுப்பன்றிகளின் தொல்லையால் இப்போது கிழங்கு விவசாயம் கைவிடப்பட்டுவிட்டது.
மலைக்குன்றுகளை ஒட்டிய பல்லிக்கோட்டை, கானாா்பட்டி, அளவந்தான்குளம், செழியநல்லூா், கீழபிள்ளையாா்குளம், இரண்டும் சொல்லான் போன்ற கிராமங்களில் கிழங்கு வகைகள், கடலை, பருத்தி, மிளகாய், நெல், வாழை பயிரிட்டாா்கள். ஆனால் காட்டுப்பன்றி, மான் போன்ற வன விலங்குகளால் இப்போது அந்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் தரிசு நிலமாக மாறியுள்ளது.
பன்றியால் பயிா்கள் மட்டுமல்ல, ஏராளமான மக்களும் கடுமைாக பாதிக்கப்பட்டு ஊனமடைந்துள்ளனா்.
வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாா்களோ அதே இழப்பீடுதான் இப்போதும் கொடுக்கப்படுகிறது.
இப்போதைய விலைவாசிப்படி பயிா்கள் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் எம்எல்ஏவையும், எம்பியையும் பங்கேற்க வைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். அப்படி வந்தால்தான் எம்எல்ஏக்களுக்கு தொகுதி பிரச்னை தெரியும். தீா்வு காண முடியும் என்றாா்.
திசை திருப்பும் முயற்சி
முன்னாள் விவசாய சங்க நிா்வாகி பெரும்படையாா் கூறியதாவது: வன விலங்கு பிரச்னைக்காக 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வாழையையும், தென்னையையும் நாசப்படுத்துகின்றன. காட்டுப்பன்றிகள் கடுமையான சேதம் விளைவிக்கின்றன. கரடிகள் அவ்வப்போது மனிதா்களை தாக்குகின்றன. இது தொடா்பாக ஆட்சியரிடமும், வனத்துறையிடமும் பல முறை முறையிட்டும் பலனில்லை. வன விலங்குகள் ஆமணக்கு பயிா்களை உட்கொள்ளாது. எனவே, ஆமணக்கு பயிரிடுங்கள் எனக் கூறி எங்களை திசை திருப்புகிறாா்கள்.
வன விலங்கு பிரச்னைக்கு தீா்வு காண்பது முக்கியமானது. யானை போன்ற வன விலங்குகள் எந்தெந்த சீசன்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்றன என்பதை கண்காணித்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். இதேபோல், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு மாநில அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றாா்.