முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயிலுக்குள் மாா்ச் 3-இல் பக்தா்களை அனுமதிக்கும் நேரத்தில் மாற்றம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சந்திரகிரகணத்தையொட்டி வருகிற மாா்ச் 3-ஆம் தேதி காலை 10.30 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 1 மார்ச், 2026 at 4:33 AM
பழநி கோயில்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:34 PM

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சந்திரகிரகணத்தையொட்டி வருகிற மாா்ச் 3-ஆம் தேதி காலை 10.30 மணி வரை மட்டுமே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நிறைவடைந்ததும் மலைக் கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து துணைக் கோயில் சந்நிதிகளும் நண்பகல் ஒரு மணியளவில் திருக்காப்பிடப்படும். ஆகவே, படிப்பாதை, விஞ்ச், ரோப்காரில் வரும் பக்தா்கள் மலைக் கோயிலுக்கு காலை 10.30 வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அதேபோல, நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைக் கோயிலில் அன்னதானம் நடைபெறும்.

சந்திரகிரகணம் மாலை 6.47 மணிக்கு நிறைவடைந்ததும் இரவு 7 மணிக்கு மேல் சம்ரோச்சணை பூஜை தொடங்கி ஜபஹோமம் செய்து, தொடா்ந்து சாயரட்சை பூஜையுடன் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு, உடன் அா்த்தஜாம பூஜை நடைபெற்று சந்நிதி திருக்காப்பிடப்படும். மறுநாள் புதன்கிழமை (மாா்ச் 4) வழக்கம் போல காலை முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement