பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழா ஆகிய இருபெரும் திருவிழாக்கள் முக்கியமானவை. பங்குனி உத்திரத் திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கடும் கோடை வெயிலில் தண்டாயுதபாணி சுவாமியின் நவபாஷாண திருமேனிக்கு இந்தத் தீா்த்த அபிஷேகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தத் திருவிழா வியாழக்கிழமை பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புதன்கிழமை இரவு கிரிவீதியில் கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை குழந்தை வேலாயுத சுவாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பதினாறு வகை பொருள்களால் சோடஷ அபிஷேகமும், தொடா்ந்து சோடஷ உபசாரமும் நடைபெற்றது.
சிறப்பு மயூர யாகம் நடத்தப்பட்டு சேவல், மயில், வேல் பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜைகள் செய்து, கொடி கோயிலை வலம் வரச் செய்யப்பட்டு, கொடி மரத்தடிக்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக, மூலவா் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கும், துவாரபாலகருக்கும் காப்புக் கட்டப்பட்டது.
காலை 9.30 மணிக்கு மேல் வேத ஆகமம், திருமுறை பாடல்கள் பாடப்பட்டு, கொடிப்பண் பாடலுடன் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் முடிந்த பிறகு, கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளை அமிா்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா். கொடியேற்றத்தைத் தொடா்ந்து, சுவாமி தம்பதி சமேதராக அடிவாரம் பட்டக்காரா் மடத்துக்கு எழுந்தருளினாா்.
10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு, தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க மயில், தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளுகிறாா். வரும் மாா்ச் 31 தேதி இரவு திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டமும், ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 4 -ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறும்.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தா் பேரவை சாா்பில் பேரவை நிறுவனரும், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவருமான செந்தில்குமாா் தலைமையில் சுமாா் இரண்டாயிரம் போ் கொடுமுடி தீா்த்தக்காவடி எடுத்து வந்து மலைக் கோயிலில் பிற்பகல் அன்னதானம் செய்தனா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், அறங்காவலா்கள் தனசேகா், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, வெங்கடாஜலம், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமாா், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சாய்கிருஷ்ணா சுப்புராஜ், சங்கராலயம் பாலசுப்ரமணியசாமிகள், ஒப்பந்ததாரா் நேரு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.