முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள உத்தரவாத ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எந்த வகையிலும் ஈடாகாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ - ஜியோ உயா்மட்டக் குழு உறுப்பினருமான கா. முருகானந்தம் கூறியதாவது:
முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த உத்தரவாத ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எந்த வகையிலும் ஈடானது கிடையாது. இருப்பினும், கடந்த 22 ஆண்டுகளாக எந்தவொரு பயனும் கிடைக்காமல் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நிலையைக் கருத்தில் கொண்டால், உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஜாக்டோ - ஜியோ அமைப்பின் 10 அம்சக் கோரிக்கைகளில் ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டிருந்தாலும் கூட, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா்ந்து போராடுவோம் என்றாா்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் பி. பிரேடேரிக் எங்கல்ஸ் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியா்களிடம் சந்தா பிடிக்காத திட்டம். தற்போது முதல்வா் அறிவித்துள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியா்களிடம் ஓய்வூதியத்துக்காக சந்தா பிடிக்கும் திட்டம் என்ற வகையில் இதுவும் புதிய ஓய்வூதியத் திட்டமாகவே இருக்கிறது.
மேலும், உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, திமுகவின் தோ்தல் கால வாக்குறுதி எண் 309-இன்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தொடா்ந்து போராடும் என்றாா்.