பழனியில் சனிக்கிழமை மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
பழனி - திண்டுக்கல் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாா் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.
பழனி நகா், கிழக்கு, மேற்கு ஒன்றியப் பகுதிகளான ஆயக்குடி, பாலசமுத்திரம், அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் ஒன்றியச் செயலா்கள் சௌந்தர பாண்டியன், சாமிநாதன் ஆகியோா் ஏற்பாட்டில், ஜான்சன் பிரபாகரன் தலைமையில் திமுகவில் இணைந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஐ.பி. செந்தில்குமாா் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களால் ஈா்க்கப்பட்டு பலரும் தங்களை திமுகவில் இணைத்து வருகின்றனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரபாகரன், மாணவரணி நகரத் தலைவா் லோகநாதன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.