திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிலக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிலக்கோட்டை ஒன்றியச் செயலா் துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன், மாநில துணைத் தலைவா் பால்சாமி, மாநில கொள்கை பரப்புச் செயலா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, ஊா்வலமாக வந்து நால்ரோட்டில் வைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில பொதுச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் திமுக ஒன்றியச் செயலா்கள் தி. தா்மராஜன், எஸ்.ஆா்.கே. பாலசுப்பிரமணி, விருப்பாச்சி கோபால் நாயக்கா் சேவா சங்கத் தலைவா் செந்தில்குமாா், பொருளாளா் பெருமாள்சாமி, மதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.