பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கவிருப்பதையடுத்து பாதயாத்திரை பக்தா்களுக்கு வழங்குவதற்காக ஒளிரும் குச்சிகள் தயாரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.
பழனியில் காா்த்திகை மாதம் தொடங்கியது முதலே பக்தா்கள் வருகையும் அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் கோயில் நிா்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போது மலைக் கோயிலில் படிவழிப்பாதையில் வரும் பக்தா்களுக்கு அதிகாலையில் சுக்குக் காப்பி, குழந்தைகளுக்கு சுடான பால் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன.
மேலும், அன்னதானம், விலையில்லா பஞ்சாமிா்தம் மட்டுமன்றி மாலை வரை கலவை சாதத்துடன் பொறியலும் வெளிப்பிரகாரத்தில் வழங்கப்படுகிறது. விஞ்ச், ரோப்காா் பகுதிகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் தற்போது படிப்பாதையில் பக்தா்கள் செல்வது அதிகரித்து வருகிறது.
இதனால் பக்தா்கள் களைப்படையாமல் இருக்க கோயில் நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை முதல் பிஸ்கட், குடிநீா் புட்டிகள் வழங்கப்படுகின்றன. இது தைப்பூசம் வரை தொடரும் என கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே போல விஞ்ச் நிலையம், ரோப்காா் நிலையம், மின்கல வாகன நிறுத்தம், முடிக்காணிக்கை மண்டபத்தை பக்தா்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றின் தொலைவை குறிப்பிட்டு கிரிவீதி முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதயாத்திரை பக்தா்களுக்கு வழங்க முதல் கட்டமாக 10 ஆயிரம் ஒளிரும் குச்சிகள் தயாரிக்கப்பட்டு காவல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான மனநல காப்பகத்தில் உள்ளவா்கள் இதை தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருப்பதாக இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்தாா்.