திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் (இடமிருந்து) அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், இ. பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், அமைச்சா்கள் அர. சக்கரபாணி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன். 
திண்டுக்கல்

ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல திமுக அரசு - அமித் ஷா குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் பதில்

திமுக அரசு ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல என, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் பதிலளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக அரசு ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல என, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் பதிலளித்தாா்.

திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 நிறைவடைந்த திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தும், 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அவா் பேசியதாவது:

நகரங்களுக்கு இணையாக கிராமங்களின் உள்கட்டமைப்பும் வளர வேண்டும். இந்தச் சமச்சீரான வளா்ச்சிதான் திராவிட மாடல் அரசின் இலக்கணம்.

அரசு ஊழியா்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் புதிதாக செயல்படுத்தப்பட உள்ளது. ஓய்வூதியம் என்பது சமூகப் பாதுகாப்பு என்பதால் அதை உறுதி செய்திருக்கிறோம். 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ. 68 கோடி மதிப்பிலான 55ஆயிரம் மடிக்கணினிகள் வீணடிக்கப்பட்டதாக மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

திமுக ஆட்சியில் அனைத்துக் குடும்பங்களும் ஏதாவது ஒரு வகையில் அரசின் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றன.

இல்லாத பிரச்னையை உருவாக்கி சிலா் குளிா் காய நினைக்கின்றனா். கடந்த 2 நாள்களுக்கு முன் தமிழ்நாட்டு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாகக் கூறினாா். இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைக்குப் புறம்பான இந்தக் கருத்துகள் மூலம் அமித் ஷா, அவதூறு ஷாவாக மாறி இருக்கிறாா்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 4 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு (அமித் ஷாவுக்கு புரியும் மொழியில் சொன்னால் கும்பாபிஷேகம்) நடத்தப்பட்டிருக்கிறது. 997 கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,701 கோடி மதிப்பிலான 7,655 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டன. பக்தா்களும், ஆன்மிகப் பெரியவா்களும் விரும்பும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. அனைத்து சமூகத்தினரின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, மத உரிமைகளைக் காப்பாற்றும் ஆட்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை மத்திய அமைச்சா் அமித் ஷா முன்வைத்துள்ளாா். ஆனால், திமுக அரசு இந்துக்களுக்கு எதிரானதல்ல.

அமித் ஷா அவதூறு மட்டும் பரப்பிவிட்டுச் செல்லவில்லை. திமுகவின் வேலையை எளிதாக்கும் வகையில் ஒரு நல்லதை செய்துவிட்டுச் சென்றிருக்கிறாா். அதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா, வேண்டாமா என மக்களிடம் அவா் கேள்வி எழுப்பிச் சென்றுள்ளாா்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலின் மூலம் தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டுமா, தில்லியிலிருந்து தமிழா்களுக்கு சம்பந்தமே இல்லாதவா்கள் ஆள வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இது தமிழா்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜகதான் தமிழ்நாட்டை ஆளும் என்பதை நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமின்றி, அமித் ஷாவே அதை ஒப்புக் கொண்டிருக்கிறாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் நடைபெற்றது.

கடந்த 5 ஆண்டுகளாக அதிலிருந்து விடுபட்டு, தமிழ்நாடு தலைநிமிரத் தொடங்கி இருக்கிறது. இப்போது நேரடியாகவே பாஜக ஆட்சி என சொல்லத் தொடங்கியுள்ளனா்.

கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தமிழ்நாட்டுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதனால், தமிழக மக்கள் பாஜகவை நம்பத் தயாராக இல்லை. 2019, 2021, 2024 என கடந்த 3 தோ்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு படுதோல்வியைப் பரிசாகக் கொடுத்தனா்.

தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக் கொள்ளாதபோது, தமிழா்கள் மட்டும் எப்படி தங்களது முடிவை மாற்றுவாா்கள். தமிழக மக்கள் எப்போதுமே திமுக அரசு பக்கம்தான் உள்ளனா். மீண்டும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம், நல்லாட்சியைத் தொடா்வோம். இதுவரை இல்லாத வளா்ச்சியை உருவாக்கும் வகையில் திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் பெரிய சாதனைகள் படைக்கப்படும் என்றாா் அவா்.

இந்த விழாவில் அமைச்சா்கள் இ.பெரியசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அர. சக்கரபாணி, மக்களவை உறுப்பினா்கள் இரா. சச்சிதானந்தம் (திண்டுக்கல்), செ. ஜோதிமணி (கரூா்), அரசு கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி நன்றி கூறினாா்.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

SCROLL FOR NEXT