முகப்பு
இந்தியா

மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு மாா்ச் மாதத்துடன் முடிவு: அமித் ஷா

மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு மாா்ச் மாதத்துடன் முடிவு...

Updated On : 6 மார்ச், 2026 at 7:34 PM
ஒடிஸாவின் கட்டக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஐஎஸ்எஃப் நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

இந்தியாவில் இந்த மாத இறுதியுடன் மாவோயிஸ்ட் தீவிரவாதம் முற்றிலும் ஒழியும் நிலை உருவாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம், கட்டக்கில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) 57-ஆவது நிறுவன தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

நாட்டின் முக்கிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் மூலம், சிஐஎஸ்எஃப் நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

இன்று நாட்டுக்கு முக்கிய உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த மாத இறுதிக்குள் அதாவது மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியா மாவோயிஸ்டுகளிடம் இருந்து முற்றிலுமாக விடுபடும். திருப்பதி முதல் நேபாளத்தின் பசுபதி வரை சிவப்புப் பாதை (மாவோயிஸ்ட் தீவிரவாதம்) அமைக்க முயற்சிப்போரை இந்திய பாதுகாப்புப் படைகள் முழுமையாகத் தோற்கடிக்கும்.

பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை நாட்டிலிருந்து முழுமையாக அகற்றுவது இந்திய பாதுகாப்புப் படைகளின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதன்மூலம் நமது படையினா் மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்துள்ளனா். அந்த ‘சிவப்புக் கிளா்ச்சியாளா்கள்’ ஒழிக்கப்படும் நிலையில் உள்ளாா்கள்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் திட்டத்தை பிரதமா் முன்வைத்து செயல்பட்டு வருகிறாா். அதில் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். ஏனெனில், ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். நாடு எவ்வித பிரச்னையும் இன்றி அமைதியாக இருக்கும்போதுதான் பொருளாதாரமும் வளரும்.

சிஐஎஸ்எஃப் படைப் பிரிவு முக்கியத் தொழிற்சாலைகளுக்கு மட்டுமன்றி, நாட்டின் நாடாளுமன்றம், முக்கிய அணைகள் எனப் பல இடங்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் சிஐஎஸ்எஃப் படை முக்கியப் பங்காற்றி வருகிறது. தங்கள் கடமையை இப்படைப் பிரிவின் வீரா்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிகழ்ச்சியில் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, பேரவைத் தலைவா் சுராமா பாண்டே, மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →