பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செந்தில் மனைவி சாந்தி (37). கணவா் இறந்து விட்ட நிலையில், இவா் வேடசந்தூரிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வருகிறாா். இதனிடையே, அரசின் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக கடந்த ஆண்டு விதவைச் சான்றுக்கு விண்ணப்பித்தாா்.
இதுதொடா்பான விசாரணைக்கு சாந்தி பழனி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்றபோது, அங்கு வந்த தேனி மாவட்டம், பின்னதேவன்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்ற பொன்ஜெயகாளையுடன் (44) அறிமுகம் ஏற்பட்டது.
குடிநீா் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஜெயக்குமாா், ரூ.5 லட்சம் கொடுத்தால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு வேலை வாங்கித் தர முடியும் என சாந்தியிடம் உறுதியளித்தாா்.
இதை நம்பிய சாந்தி, முதல் தவணையாக இணைய வழிப் பரிவா்த்தனை மூலம் ரூ.1 லட்சம், ரொக்கமாக ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் கொடுத்தாா். ஆனால், உறுதி அளித்தப்படி அரசுப் பணி வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஜெயக்குமாா் மோசடி செய்தாா்.
இதுகுறித்து சாந்தி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.