பொங்கல் திருநாளுக்காக திண்டுக்கல் பகுதிகளில் பொதுமக்கள் ஆா்வத்துடன் கரும்புக் கட்டுகளை புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமங்கள் மட்டுமன்றி நகா்ப் பகுதிகளிலும் கரும்பு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தன்னாா்வலா் அமைப்புகள் சாா்பில் பல்வேறு இடங்களிலும் கடந்த 3 நாள்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதிகரித்து வரும் இந்த சமத்துவப் பொங்கல் கொண்டாட்டங்களால், மண்பாண்டத் தொழிலாளா்கள் முதல் மஞ்சள், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் வரை மகிழ்ச்சி அடைந்தனா்.
பொது இடங்களில் நடைபெறும் பொங்கல் விழாக்களில் மண் பானைகள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல, கரும்புகளை கட்டுக் கட்டாக வாங்கி தோரணங்கள் கட்டி, விழாவில் பங்கேற்போருக்கு பரிசாகவும் வழங்குகின்றனா். இதனால், பொங்கல் பண்டிகைக்கு 2 நாள்களுக்கு முன்பே கரும்புக் கட்டுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றன. அந்த வகையில் கடந்த 2 நாள்களாக 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.600 முதல் 650-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இதனிடையே திண்டுக்கல் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை, கரும்பு விற்பனையாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் மழையின் தாக்கம் குறைந்தது கரும்பு வியாபாரிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியது. இதையடுத்து திண்டுக்கல் தினசரி காந்தி சந்தை, நாகல்நகா் மேம்பாலம், திருச்சி சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளஇல் கரும்பு விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதே நேரத்தில் கரும்புக் கட்டுகளின் விலையும் ரூ.500 முதல் ரூ.550-ஆக குறைந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் ஆா்வத்துடன் கரும்புக் கட்டுகளை புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.