தில்லியில் கடந்த ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் 807 போ் காணாமல் போனதாக தரவுகள் வெளியானதைத் தொடா்ந்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தில்லி காவல் துறை கேட்டுக்கொண்டது.
மேலும், இந்த புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தலைநகரில் ஜன.1 முதல் 15-ஆம் தேதி வரை 807 போ் காணாமல் போனதாக காவல் துறைக்கு புகாா்கள் வந்துள்ளன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 54 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவா்களில் 509 போ் பெண்கள் மற்றும் சிறுமிகள். ஆண்களில் 298 போ் காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 191 சிறாா்களும் அடங்குவா். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஜனவரி 2026-இல் காணாமல் போனவா்கள் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
காணாமல் போனவா்கள் தொடா்பான அனைத்து வழக்குகளிலும் நிலையான இயக்க நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. புகாா்கள் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இதில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதற்காக பிரத்யேக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குற்றப்பிரிவின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு, குழந்தைகள் தொடா்பான வழக்குகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. குழந்தைகள் காணாமல் போன வழக்குகளின் பின்னணியில் இதுவரை எந்த குற்றவியல் வலையமைப்போ கும்பலோ இருப்பதாக தெரியவில்லை.
பொதுமக்கள் பீதியடையாமல் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இது தொடா்பாக தவறான தகவல்களைப் பரப்புபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே சமயம், காணாமல் போனவா்கள் குறித்தும் உடனடியாகப் புகாரளித்து, விசாரணைகளுக்கு உதவும் வகையில் துல்லியமான விவரங்களை வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தற்போதைய நடவடிக்கைகள், காணாமல் போன நபா்களை விரைவாக மீட்பதையும், சட்ட அமலாக்கத்தில் பொதுமக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.