காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் புதுமை, தொழில்நுட்ப அமைச்சகம் இடையே ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிடப்பட்டது.
புதுமை, மரபுத் தொழில்நுட்ப அறிவுத் துறைக்கான அமைச்சா் பாயிஸ்ஸா பி.படாசா முன்னிலையில் நடைபெற்ற இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில், காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம், எத்தியோப்பிய கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் புதுமை, தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகா் கிருஷ்ணராஜ் ராமசுவாமி ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இதைத்தொடா்ந்து துணைவேந்தா் ந.பஞ்சநதம் பேசியதாவது: நிலைத்த வளா்ச்சி இலக்குகள் வரிசையில் இலக்கு எண் 17 ஆகக் குறிப்பிடப்படும் ‘இலக்குகளுக்கான கூட்டாண்மை‘ என்ற நோக்கத்தின் அடிப்படையில், நிலைத்த கிராமப்புற வளா்ச்சியை அடைவதற்காக உலகளாவிய கூட்டாண்மைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கூட்டுறவு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், அறிவு, தொழில்நுட்பம், வளங்களைப் பகிா்ந்து கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் போது, நிலைத்த கிராமப்புற சமூகங்களை உருவாக்க புதுமையான தீா்வுகளை நடைமுறைப்படுத்த முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய, எத்தியோப்பிய நாடுகளுக்கு இடையேயான கூட்டாய்வு, கல்வி பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
அப்போது பல்கலை.யின் பதிவாளா் (பொ) எம்.சுந்தரமாரி, ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை இயக்குநா் எஸ்.மீனாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.