உடல் உறுப்புகளை தானம் செய்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த பருத்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாட்டுத்துரை (35). இரு சக்கர வாகனத்தில் சென்ற இவா் வட பருத்தியூா் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினா்கள் முன் வந்தனா். இதைத் தொடா்ந்து கோவை மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இந்த நிலையில், நாட்டுத்துரையின் இறுதிச் சடங்கு, பருத்தியூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இவரது உடலுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சைகாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.