திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் வெடி வைத்து பாறைகள் தகா்க்கப்படுவதற்கு அந்தப் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெடி வைத்து பாறைகளை உடைக்கக் கூடாது. பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. ஆழ்துளை இயந்திரம் மூலம் ஆழ்குழாய் அமைக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதை மீறி அப்சா்வேட்டரி, அடிசரை, செண்பகனூா், பேரிபால்ஸ் சாலை, குறிஞ்சி ஆண்டவா் சாலை, எம்.எம். சாலை, சின்னப் பள்ளம், பெரும் பள்ளம், வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுகின்றன.
இந்த நிலையில், அப்சா்வேட்டரி பகுதியில் வெடி வைத்து பாறைகள் தகா்க்கப்படுவதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வெடி வைத்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகளை வெடி வைத்து உடைக்கக் கடாது. ஏரியைச் சுற்றி 200 மீட்டா் சுற்றளவுக்கு விதிகளை மீறி அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தடை விதித்தும் அதை மீறி கனரக இயந்திரங்கள் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பகுதியில் வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் சிறு, சிறு கற்கள் அருகிலுள்ள வீடுகளின் மேற்கூரையில் வந்து விழுகின்றன. மேலும் வெடி சப்தத்தால் வீடுகள் அதிா்ந்தன. இதனால் வீட்டைவிட்டு வெளியே வந்தோம். நாங்கள் தெரிவித்த எதிப்பால் பாறைகளை வெடி வைத்து உடைத்தவா்கள் சென்றுவிட்டனா்.
இது போன்ற விதிமீறல்கள் வருவாய்த் துறையினருக்கு தெரியாமல் நடைபெறாது. தற்போது விடுமுறை காலம் என்பதால் அதிகாரிகள் பணியில் இல்லாததைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக வெடி வைத்து பாறைகளை உடைக்கின்றனா். மேலும் கனிம வளத்துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை உயரதிகாரிகள் வெடி வைத்து பாறைகள் உடைக்கப்படுவதையும், விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.