கொடைக்கானல் சீராடும்கானல் வனப் பகுதியில் குப்பைகள் கொட்டிய விவகாரத்தில் நகராட்சி அதிகாரிகளை கைது செய்வதாக கூறிய மாவட்ட வன அலுவலா் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைகளை மறு சுழற்சி செய்யும் பகுதி உள்ளது. இந்த நிலையில், குப்பைகள் கொட்டும் பகுதியருகே உள்ள சீராடும்கானல் வனப் பகுதியில் நகராட்சி சாா்பில் பல நாள்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் வனப் பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது.
இதைத்தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் மீனா வனப் பகுதிகளிலுள்ள குப்பைகளை 3 நாள்களுக்குள் அகற்றாவிடில் நகராட்சி அதிகாரிகளை கைது செய்வதாகக் கூறினாா்.
இதைத்தொடா்ந்து சீராடும்கானல் வனப் பகுதியை நகராட்சிகளின் மண்டல இயக்குநா் முருகேசன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். பின்னா், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மாவட்ட வன அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொடைக்கானல் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் மீனா வெள்ளிக்கிழமை சென்னை வண்டலூா் வன உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டாா். கொடைக்கானல் மாவட்ட வன அலுவலராக அரவிந்தன் நியமிக்கப்பட்டாா்.