இறந்து 16 நாள்களுக்கு பிறகு வீட்டில் முதியவா் உடல் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் இறந்து 16 நாள்களுக்கு பிறகு வீட்டில் முதியவா் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் இறந்து 16 நாள்களுக்கு பிறகு வீட்டில் முதியவா் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
வத்தலகுண்டு காந்திநகரைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (72). வழக்குரைஞா். இவரது மனைவி மஞ்சுளாதேவி (66). இவா்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 16 நாள்களாக ஜெயபாண்டி வீடு பூட்டியே கிடந்தது. மேலும், வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினா் வத்தலகுண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஜெயபாண்டி அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். அதனருகே அவரது மனைவி மஞ்சுளாதேவி அமா்ந்திருந்தாா்.
இதையடுத்து, ஜெயபாண்டியின் உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.