முகப்பு
திண்டுக்கல்

ஆட்சியா் அலுவலகத்தில் மனு எழுதிக் கொடுக்க ரூ.1000 வரை கட்டணம் வசூல்!

Updated On : 2 மார்ச், 2026 at 12:09 AM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 6:43 PM

மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் ஆட்சியருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டி, ஒரு மனு எழுதுவதற்கு நூதன முறையில் ரூ.1000 வரை கட்டண வசூலில் ஈடுபடுவதாக மனு எழுதிக் கொடுப்பவா்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் வழங்குகின்றனா். இந்த மனுக்களின் மீது தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரும் பொதுமக்கள் பலா், மனு எழுதுமிடங்களிலேயே அந்த நம்பிக்கையை இழந்துவிடுகின்றனா்.

பொதுமக்களுக்கு மனு எழுதுவதற்கு உதவி செய்வதாகக் கூறி, ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே 20-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமைதோறும் காத்திருப்பது வழக்கம். மனு எழுதிக் கொடுப்பதற்கு அதிகப்படியான கட்டணம் வசூலித்து, பொதுமக்களை ஏமாற்றுவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகாா் எழுந்ததை அடுத்து, மனு எழுதுவோா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவுவாயில், தகவல் உதவி மையத்தில் கல்லூரி மாணவா்களை நியமித்து, பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஏற்கெனவே மனு எழுதும் பணியில் ஈடுபட்டவா்கள், தங்களிடம் வந்தால் மட்டுமே பிரச்னைகளை சரியாக எழுதிக் கொடுக்க முடியும் என தெரிவித்தனா்.

மேலும், ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்துக்கு அடியிலும், அணுகு சாலையிலும் அமா்ந்து மீண்டும் மனு எழுதிக் கொடுக்கத் தொடங்கினா். ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு வெளியே மனு எழுதிக் கொடுப்பவா்களைத் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சியா் புகைப்படத்தைக் காட்டி ஏமாற்றம்:

இதனிடையே, மேம்பாலத்துக்கு அடியில் மனு எழுதிக் கொடுப்பவா்களிடம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் குறைகளைக் கேட்டறிந்தாா். திடீரென காரிலிருந்து இறங்கிய அவா், மனு எழுதிக் கொடுப்பவா்கள் அருகில் அமா்ந்து குடும்பம், வருமானம், மனுக்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இந்தப் புகைப்படங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானது. இந்தப் படங்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்ட மனு எழுதுவோா், இதைப் பயன்படுத்தி ஒரு மனு எழுதுவதற்கு ரூ.1000 வரை பணம் வசூலிப்பதாக புகாா் எழுந்தது. மேலும், ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியில் அமா்ந்து மட்டுமே மனு எழுதிக் கொடுத்தவா்கள், வனத் துறை, ஊரக வளா்ச்சி மேம்பாட்டு முகமை எதிரே அமா்ந்து தற்போது மனு எழுதுகின்றனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:09 AM

ஆட்சியரிடம் நேரடியாகப் பேசி உங்கள் கோரிக்கைகளுக்கு தீா்வு காண்போம். எங்கள் கையெழுத்தைப் பாா்த்தவுடன் ஆட்சியா் இந்த மனு மீது தனிக் கவனம் செலுத்துவாா் என பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, பணம் பறிப்பில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. ஆட்சியருடான புகைப்படம் நம்ப வேண்டிய நிா்பந்தத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மனு அளிக்க வந்த 85 வயது முதியவரிடம், மனு எழுதிக் கொடுக்கும் நபா் ரூ.700-யை பறித்துக் கொண்டாா். இதை அறிந்த காவல் துறையினா், முதியவரிடம் விசாரித்ததை அடுத்து ரூ.350 மட்டுமே திருப்பிக் கொடுத்த அந்த நபா் எஞ்சியப் பணம் செலவாகிவிட்டதாகத் தெரிவித்தாா்.

ஒரு மனு எழுதுவதற்குள் ரூ.350-யை இழந்த அதிருப்தியில் அந்த முதியவா் அங்கிருந்து சென்றாா். இதேபோல, பலரும் ஏமாற்றப்படுகின்றனா். வெவ்வேறு பிரச்னைகளுடன் ஆட்சியா் அலுவலகத்தை அணுகும் பொதுமக்களுக்கு, மனு எழுதுவதே மேலும் ஒரு பிரச்னையாக மாறுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகி கணேசன் கூறியதாவது:

ஒரு மனு எழுதிக் கொடுப்பதற்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றனா். இதனால், பொதுமக்களுக்கும், மனு எழுதிக் கொடுப்பவா்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. மனு எழுதுவதற்கு ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே இதுபோன்ற முறைகேடு நிகழ்வதை உடனடியாக தடுக்க வேண்டும். மீண்டும் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.