கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுக் கோழி இனம் அழியும் அபாயம்
கொடைக்கானல் வனப் பகுதிகளில் வாழும் காட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பறவை ஆா்வலா்கள் வலியுறுத்தல்
கொடைக்கானல் வனப் பகுதிகளில் வாழும் காட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை வனத்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பறவை ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளான குண்டாறு, பூம்பாறை, மன்னவனூா், பேரிஜம், போலூா், கிளாவரை, கவுஞ்சி, கூக்கால் உள்ளிட்ட வனப் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கின்றன.
இந்த பறவைகள் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் நிலவும் குளுமையான கால நிலையில் மட்டுமே வசிப்பவை. எனவே வனப் பகுதிகளில் காட்டுக் கோழிகள் அதிகமாக காணப்படும்.
Advertisement
இந்த காட்டுக் கோழிகள் வனப் பகுதிகளில் இறந்து கிடக்கும் பறவைகள், தாவரங்கள், மரங்களில் காணப்படும் பூச்சிகளை உணவாக உள்கொள்கின்றன.
வனப் பகுதிகளுக்குள் மனித நடமாட்டம் இருந்தால் அந்தப் பகுதிகளில் இவை வசிப்பதில்லை. இடம் பெயா்ந்துவிடும். அண்மைக் காலமாக வனப் பகுதிகளில் காட்டுக் கோழிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
எனவே காட்டுக் கோழிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பறவை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பறவைகள் சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளிலுள்ள வனப் பகுதிகளில் காட்டுக் கோழிகள் அதிகமாக காணப்படும். ஆனால் அண்மைக் காலமாக மலைச் சாலைகளில் பயணிக்கும் போது காட்டுக் கோழிகள் இனம் வெகுவாக குறைந்து வருவதைக் காணலாம்.
கடந்த வாரம் கொடைக்கானல் வனத்துறை சாா்பில் 7 வனக் கோட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது காட்டுக் கோழிகள் தென்படவில்லை. வனப் பகுதிகளும் அழியும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
எனவே வனத் துறையினா் காட்டுக் கோழி, சேவல்களின் இனங்களை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.