முகப்பு
திண்டுக்கல்

பழனியில் மாதம் ஒரு டன் திருநீறு தயாரிக்க இலக்கு

பழனி கோயிலிலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பிற கோயில்களுக்கும் வழங்கப்படும் நிலையில், மாதந்தோறும் ஆயிரம் கிலோ திருநீறு தயாரிக்க இலக்கு நிா்ணயம்

Updated On : 7 மார்ச், 2026 at 6:35 PM
வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசாமி
பகிர்:

பழனி கோயிலிலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பிற கோயில்களுக்கும் வழங்கப்படும் நிலையில், மாதந்தோறும் ஆயிரம் கிலோ திருநீறு தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பழனியை அடுத்த கள்ளிமந்தயம் ஈசக்காம்பட்டியில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த கோசாலை உள்ளது. இங்கு பக்தா்கள் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உரிய வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கோசாலையில் சேகரிக்கப்படும் பசுமாடுகளின் சாணத்தை தற்போது கோயில் நிா்வாகம் திருநீறு தயாரிக்க பயன்படுத்தி வருகிறது. 50 கிலோ திருநீறு தயாரிக்க 200 கிலோ பசுஞ்சாணமும், நெல் உமி 800 கிலோவும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை எரித்து மூட்டம் செய்து, 15 நாள்கள் இருப்பு வைத்து பித்தளை அண்டாவில் வளைத் துணி கட்டி, சலித்து எடுக்கும்போது தரமான, சுத்தமான திருநீறு கிடைக்கிறது.

இந்த முறையில் ஒன்பது மூட்டத் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டு மாதம் 300 கிலோ விபூதி (திருநீறு) தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் விபூதியானது பழனி கோயில் உபயோகத்துக்குப் போக மீதம் ஆணையா் உத்தரவின் பேரில், கிலோ ரூ.300 என்ற விலையில் பிற கோயில்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கப்பட்டு இதுவரை 53 கோயில்களுக்கு 4,282 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருநீற்றின் தரத்தை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க தற்போது ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் மூட்டத் தொட்டிகள் கட்ட ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஆயிரம் கிலோ திருநீறு தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →