முகப்பு
திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே கோழிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On : 21 மார்ச், 2026 at 8:01 PM
குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக வீசப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே சாலையோரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜிலியம்பாறையில், கரூா் பிரதான சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் அருகில், திண்டுக்கல்- கரூா் பிரதான சாலையோரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டன. இதைத் தடுப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், கோழி இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனா். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மட்டுமன்றி, மின்வாரிய அலுவலக ஊழியா்களும் பாதிப்படைகின்றனா். மேலும் கோழி இறைச்சிக்காக நாய்கள் அந்த பகுதியில் முகாமிடுவதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் உள்ளது.

சுகாதாரக்கேடுகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையம் பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.