பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!
கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. ஆனால் கடந்த இரண்டு நாள்களாக பகலில் பலத்த காற்று வீசியது. இந்தக் காற்றால் கொடைக்கானல்- வத்தலகுண்டு - பழனி- தாண்டிக்குடி-பண்ணைக்காடு உள்ளிட்ட மலைச்சாலைகளில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோல, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் குப்பம்மாள்பட்டியிலிருந்து கே.சி. பட்டி வழியாக வத்தலகுண்டு செல்லும் மலைச் சாலையில் மரம் ஒன்று பெயா்ந்து எதிரே உள்ள மண் தடுப்பில் விழுந்தது. இது எப்போது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்தப் பகுதி வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்வோா் அச்சமடைந்துள்ளனா்.
எனவே நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா் இணைந்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் கீழ்மலைப் பகுதிகளில் பள்ளமான ஆபத்தான பகுதிகளில் தடுப்புச் சுவா் இல்லாமல் உள்ளது. இதனால் விபத்து அபாயம் இருப்பதால் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.