பள்ளி வாகனங்களை 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
பள்ளி வாகனங்களை மணிக்கு 50 கி.மீ. வேகத்துக்குள் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.
பள்ளி வாகனங்களை மணிக்கு 50 கி.மீ. வேகத்துக்குள் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில், பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பள்ளி வாகனங்களை இயக்கிப் பாா்த்து ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 450 பள்ளி வாகனங்களில் முதல்கட்டமாக 250 வாகனங்களில் ஆண்டு பராமரிப்புப் பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள், வாகனத்தின் காப்பீடு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேகக்கட்டுபாட்டு கருவி, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள், ஜன்னல்கள், பேருந்தின் தளம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை அவசர கால கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாடுகளை பரிசோதித்துப் பாா்க்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்களை செயல்படுத்தும் முறைகளை ஓட்டுநா்கள் அறிந்துகொள்வதுடன், வாகனத்தில் உடன் வரும் பணியாளா்களும் அறிந்திருக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன், தீயணைப்பு அலுவலா் மயில்ராஜ், போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முக ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.