மதுரை

ஆத்தூரில் திணறும் திமுக

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மோதும் ஒரே தொகுதியான ஆத்தூரில், கடைசி நேர நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயம் திமுக தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

ஆ. நங்கையார் மணி

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மோதும் ஒரே தொகுதியான ஆத்தூரில், கடைசி நேர நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயம் திமுக தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலிலதா போட்டியிடும் ஆர்கே. நகர், திமுக தலைவர் கருணாநிதி களம் காணும் திருவாரூர், மு.க. ஸ்டாலின் மீண்டும் களம் இறங்கியுள்ள கொளத்தூர் உள்ளிட்ட சில தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன. அந்த வரிசையில், தற்போதைய அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் போட்டியிடும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியும் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மோதும் ஒரே தொகுதி ஆத்தூர் மட்டுமே. கட்சித் தொண்டர்களை கடந்து, வெகு ஜனங்களும் ஆத்தூர் தொகுதியின் முடிவை எதிர் நோக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் கூட்டணி அமைத்து வளர்ச்சிப் பணிகளை தடுப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள் புகார் கூறி வந்த நிலையில், நத்தம் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற இரா. விசுவநாதன் திடீரென ஆத்தூர் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் 1989, 1991, 1996, 2001, 2006, 2011 என 6 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டுள்ள ஐ. பெரியசாமி, 4 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் சந்தித்துள்ளார். தற்போது, 7 ஆவது முறையாக களம் இறங்கும் ஐ. பெரியசாமிக்கு, இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் நீருபூத்த நெருப்பாக இருந்து வருவது, ஐ. பெரியசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக உள்கட்சித் தேர்தலில், தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பொறுப்புகளை வழங்கியுள்ளார் பெரியசாமி. இதனால், கட்சியில் நீண்ட நாள்களாக இருந்து வரும் திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தலைமையுடன் நெருக்கமாக உள்ள பெரியசாமியை எதிர்த்து புகார் அளிக்க முடியாத நிலை உள்ளதாகவும், திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அப்படி புகார் அளித்தாலும், விளக்கம் கேட்காமலேயே புகார் அளித்தவர் மீது தலைமை நடவடிக்கை எடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே, ஐ. பெரியசாமிக்கு மற்றொரு பிரச்னை கிளம்பியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். காந்திராஜன் தோல்வி அடைந்ததற்கு, திமுக நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், பெரியசாமி மீது அதிருப்தியில் உள்ளனர். இதனை அறிந்த அதிமுக தரப்பினர், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவதற்கு காய் நகர்த்த தொடங்கிவிட்டனர்.

17 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினர், 10 ஆண்டு காலம் அமைச்சர் என பதவியில் இருந்த ஐ. பெரியசாமி, ஆத்தூர் தொகுதியில் எதையும் சாதிக்கவில்லை என எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியாமலும், திமுக தரப்பு திணறி வருகிறது.

கடைசி நேரத்தில், அதிமுக வேட்பாளரான நத்தம் விசுவநாதன் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், திமுக தரப்பு உச்சக்கட்ட அதிருப்தியில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT