மதுரை

டிஜிபி பதவி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

தமிழக காவல்துறை தலைவர்(டிஜிபி) நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் டிஜிபி  டி. கே. ராஜேந்திரன் உள்பட பல உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக தொடர தடை விதிக்க வேண்டும். அவரது பதவி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த கே. கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.  
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை அரசு வழக்குரைஞர் முத்துக்குமாரசாமி வாதிடுகையில்,  குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் எந்த கடிதமும் வரவில்லை. குட்கா விற்பனை குறித்து சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்போது, குட்கா விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க பரிந்துரைத்து சென்னை காவல் ஆணையர் கடிதம் அனுப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரின் கடிதம் தவிர வேறு கடிதம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு வரவில்லை. அந்தக் கடிதத்திலும் காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
 மேலும், காவல் உயர் அதிகாரிகள் மீது லஞ்சப் புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. முறையான விசாரணைக்கு பின்னரே வழக்குப்பதிவு செய்ய முடியும். டிஜிபி நியமனம் தொடர்பாக 11 பேரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தான் டி.கே.ராஜேந்திரனை தேர்வு செய்தது. மேலும், அரசுப் பணியாளர் நியமனம் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடியாது எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், வருமான வரித்துறை புகார் கடிதத்தை அனுப்பி ஓராண்டாகிவிட்டது. அதில், அப்போதைய காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அது முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரை டிஜிபியாக பணி நியமனம் செய்யும் நோக்கிலேயே பத்து மாதங்களாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார்.  தற்போது அவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த வழக்கு விசாரணை நீர்த்துப்போக வழி உள்ளது என்றார்.
 இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT