மதுரை

மதுரையில் தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

DIN

மதுரையில் தொழிலதிபர் கார் மீது  பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கார் சேதமடைந்ததாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளம் புதுமீனாட்சி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அனுப்பானடி  ராஜீவ்காந்தி நகரில் இவரது நிறுவனம் உள்ளது.  இந்நிலையில், ராஜீவ்காந்தி நகரில் உள்ள நிறுவனத்தில் தனது காரை நிறுத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளார். நிறுவனத்தில் கார் ஓட்டுநர் மற்றும் காவலாளி ஆகியோர் இருந்துள்ளனர்.
அதிகாலையில் நிறுவனத்தில் வெடிச் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ஓட்டுநர் குமரன் எழுந்து பார்த்தபோது காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் காரின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. காரில் பற்றிய தீயை உடனடியாக அணைத்த குமரன் சம்பவம் பாலகிருஷ்ணனுக்கு தகவல் அளித்துள்ளார்.
பாலகிருஷ்ணன் தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.  சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சம்பவத்தை நேரில் பார்த்த ஓட்டுநர் குமரனிடம் விசாரணை நடத்தினர்.  பாலகிருஷ்ணனின் சகோதரர் மற்றும் சகோதரி மகன் ஆகியோர்  இருசக்கர வாகனத்தில் வந்து,  மதுபாட்டிலில் தீ வைத்து வீசிச் சென்றதாக அவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
3 பேர் கைது:    போலீஸார் விசாரணையில் பாலகிருஷ்ணனின் அக்காள் மகன் புது மீனாட்சி நகரைச் சேர்ந்த மோகன்(32) , மற்றும் அவரது நண்பர்கள் கல்மேடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்ற மஞ்சுராஜன்(36), புதுமீனாட்சி நகரைச் சேர்ந்த டார்ஜன் ராஜா(32) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 இதுதொடர்பான மேலும் விசாரணையில், மோகனுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்ததும் அதனால் பாலகிருஷ்ணனை பழிவாங்கும் நோக்கில் அவரது கார் மீது  மோகன் பெட்ரோல் குண்டு வீசியதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT