மதுரையில் ஒரு நாள் சுற்றுலா சென்ற பள்ளிக் குழந்தைகள்
மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் குழந்தைகள் 150 பேர் ஒரு நாள் சுற்றுலாவாக அழகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு புதன்கிழமை அழைத்துச்செல்லப்பட்டனர்.
மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் குழந்தைகள் 150 பேர் ஒரு நாள் சுற்றுலாவாக அழகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு புதன்கிழமை அழைத்துச்செல்லப்பட்டனர்.
மதுரை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவியர் 150 பேர் புதன்கிழமை ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு விடுதியில் இருந்து சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அழகர்கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவ, மாணவியர் அங்கு கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன் கோயில் மற்றும் சிலம்பாற்றருவிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அங்கு மூலிகை வனத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகம், காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
மதிய உணவுக்குப் பின்னர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் திருமலைநாயக்கர் மகாலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். சுற்றுலா சம்பந்தமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
சுற்றுலா நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து, தமிழ்நாடு விடுதி மேலாளர் டேவிட்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.